தம்பதியாக திருப்பணி செய்யும் நமது இந்த
சகோதர சகோதரிகளை வாழ்த்துவோமா?
பாரத சமுதாயத்தில் குடும்பம் தான் அடிப்படை அலகு (basic unit). குடும்பத்துக்கு அடிப்படை அல்லது வேர்
திருமணம். நமது நாட்டில் தேசம்,
தெய்வம், தர்மத்தைக் காக்க கணவனும் மனைவியும் இணைந்து பணி புரிய வேண்டும் என்பதுதான் திருமணத்தின் நோக்கமே. இந்த நோக்கத்தை வாழ்ந்து காட்டக்கூடியவர்கள் உண்டா?
தேடினால் கிடைக்கிறார்கள். அப்படி நான்
தேடியதில் கிடைத்த ஐந்து தம்பதிகளை இந்த ‘லேக்கனாமிர்தம்’ இடுகை அறிமுகப்படுத்துகிறது. ‘தம்பதி திருப்பணி’ என்ற தலைப்பிட்டு முகநூலில் mahadevan
sankaranarayanan என்ற முகவரியில் வரிசையாக எழுதி வந்தேன். அதிலிருந்து ஐந்து தம்பதிகளை இதோ சந்தியுங்கள்.
 |
டி.கே. ஹரி, ஹேமா
வேதம், சமஸ்கிருதம், ஆயுர்வேதம், யோகா … என உலகை உயர்த்தும் பாரத ஞானக் கருவூலத்தை நாடி வரும் உலகம், கருவூலத்தின் சாவி யாரிடம் இருக்கிறது என்று தேடினால் சென்னை தம்பதி டி கே ஹரி - ஹேமா இதோ எங்களிடம் இருக்கிறது என்பார்கள். 20 ஆண்டுகள் வரை ஐ டி துறையில் பணிபுரிந்து விட்டு உலகின் பல கலாச்சாரங்களையும் கண்டபின் ‘பாரத் ஞான்’ என்ற அமைப்பை நிறுவி உலகத்தாருக்கு மட்டுமல்லாமல் நம்மவர்களுக்கும் பாரத அறிவியல் மேன்மையை உணர்த்தி வருகிறார்கள். உலக அரங்கில் பாரத கலாச்சார தகவல்கள் அடங்கிய 500 மணிநேர ஆடியோ வீடியோ தொகுப்பை உருவாக்கியிருக்கிறார்கள் 100 புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறார்கள். பாரத அறிவியல் பாரம்பரியம் குறித்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியர்களாக வகுப்பு நடத்தி வருகிறார்கள். ll reactions: |
 |
ரமாதேவி, ராமகிருஷ்ண பிரசாத்
ஒரு சென்னை தம்பதிக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் உளவுப் பணி செய்து தியாகங்கள் புரிந்த ஒரு அம்மையார் சென்னையில் வசிப்பதாக தகவல் கிடைத்தது. ஒரு குடியரசு தினத்தன்று விடுமுறையை பயன்படுத்தி அந்த தம்பதி, புதல்வனும் புதல்வியும் உடன் வர, ஊரெல்லாம் தேடி கண்டுபிடித்து சரஸ்வதி என்ற அந்த அம்மையாருக்கு நமஸ்காரம் சமர்ப்பித்தார்கள். அந்த தம்பதி: ராமகிருஷ்ண பிரசாத் - ரமாதேவி. |
 |
ஜெயஸ்ரீ, நம்பி நாராயணன்
‘ஒரே நாடு’ வார இதழ் ஆசிரியர் நம்பி நாராயணனும் அவர் மனைவியார் ஜெயஸ்ரீயும் புதல்வியின் பிறந்த நாள் தோறும் ராமநாதபுரத்தில் உள்ள அன்பில்லம் சென்று இல்லவாசிகளுக்கு அன்னம் படைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். |
 |
சந்திராக்கா, ஆனந்தராவ்
ஆனந்த ராவ் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் மனைவி சந்திராக்கா ஓய்வு பெற்ற மாநில அரசு ஊழியர். 90 வயதை தாண்டிய இருவரும் வாழ்நாளெல்லாம் சிக்கலான காலகட்டங்களில் மூத்த சங்க பிரச்சாரகர்களுக்கு தங்க நிழல் தந்து பராமரித்து வந்தார்கள். நினைவில் வாழும் பெரியவர்களான சிவராம்ஜி, கோபால்ஜி இருவரும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனந்த ராவுக்கு ஆர். எஸ். எஸ்ஸிலும் சந்திராக்காவுக்கு ராஷ்ட்ர சேவிகா சமிதியிலும் அபார ஈடுபாடு. இந்த தம்பதியின் இரு புதல்விகளும் பள்ளி இறுதி தேறியதும் பெற்றோரின் அறிவுரைப்படி ஹிந்து சமுதாய ஒருங்கிணைப்புப் பணிக்காக தமிழகத்தின் பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டார்கள். தேசிய உள்ளம் கொண்ட இந்த சென்னை தம்பதி வடகிழக்கு மாநிலங்களின் மாணவ மாணவிகள் ‘மாநிலம் விட்டு மாநிலம் வாழும் மாணவர் அனுபவம்’ என்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் திட்டத்தின் கீழ் அருணாச்சல பிரதேச மாணவர்களை தங்கள் வீட்டில் தங்கவைத்து அந்த இளம் உள்ளங்களுக்கு தமிழகத்தின் உன்னதமான ஹிந்து கலாச்சாரத்தை கண்கூடாக அறிமுகப்படுத்தினார்கள்.
|
 |
விஜி, கோபாலகிருஷ்ணன்
பெற்றோரை, வீடு வாசலை விட்டு, வேறு ஒரு ஊருக்குப் போய் தங்கி விஸ்தாரக்காக ஹிந்து ஒருங்கிணைப்புப் பணிசெய்யும் எந்த ஒரு இளைஞருக்கும் தாயாக தந்தையாக இருந்து உணவளிக்கும் அந்த ஊர் மூத்த சங்க ஊழியர் சங்கப் பணிக்கு அச்சாணி எனலாம். 1980 களில் ஹரியானா பஞ்ச்குலா நகரவாசியும் ஆங்கில நாளிதழ் நிர்வாகியுமான தஞ்சை கோபாலகிருஷ்ணன் நாடெங்கும் காணப்படக்கூடிய அத்தகைய அன்பர்களில் ஒருவர். இதில் அவருக்கு உறுதுணை, உந்துதல் அவரது மனைவி ஸ்ரீமதி ராஜி. அண்மையில் என்னைப் பார்க்க வந்த (தற்போது புணேவாசிகளான) இந்த தம்பதியை ‘தம்பதி திருப்பணி’ வரிசையில் சேர்க்க இயல்பாகவே எனக்குத் தோன்றியது. (“நாங்கள் ஊர் மாறி பஞ்ச்குலாவிலிருந்து புறப்படும்போது, அடுத்தடுத்து வந்த விஸ்தாரகர்களுக்கு பழங்கால 'முறைச் சாப்பாடு' பாணியில் வாரம் முழுவதற்கும் தினம் மூன்று வேளை என 21 உணவளிக்கும் குடும்பங்களை அறிமுகப்படுத்தி அட்டவணை தயார் செய்து கொடுத்தேன்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்).
|
Comments
Post a Comment