லேக்கனாமிர்தம் 4

 


ஊர் காணாத தேர் பவனி

தாத்தா, உங்க வாழ்க்கைய பத்தி சொல்லுங்களேன்” என்று எட்டாம் வகுப்பு படிக்கும் என் பேத்தி கேட்டாள். அதற்கென்ன, தோ சொல்றேன் என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டேன். பேத்தி கேட்டது பேட்டி என்று நினைத்து விட்டேன். “நீங்க செஞ்சதை எல்லாம் வருஷ வாரியா சொல்லுங்க போதும். 'உன் குடும்பத்தில் உள்ள மிக மூத்தவரின் வாழ்க்கையை டைம் லைன் ஆக எழுதிக் கொண்டு வா' என்று வீட்டுப்பாடம் கொடுத்திருக்கிறார்கள்” என்று என் பேத்தி விளக்கவே, வருஷங்களை ஞாபகப்படுத்திக் கொள்ள மூளையைக் குடைந்து கொள்ளலானேன். பிறந்த ஆண்டு (1945), மூன்றாம் வருட ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முடித்த ஆண்டு (1971), திருமணம் நடந்த ஆண்டு (1977),  ன்று இவற்றை மையமிட்டு  மற்ற நிகழ்வுகளை பட்டியலிட்டேன். குறித்துக்கொண்ட பேத்தி குதித்தோடினாள்.

  
பொதிகையில் 'எந்தையும் தாயும்' வழங்கும் மகாதேவன் 

பேத்தியைப் போல பழைய நினைவுகளை கிளற ஒரு வாய்ப்பு அளித்தது தொலைக்காட்சி. இன்றைய டிடி தமிழ் தொலைக்காட்சி பொதிகையாக இருந்த போது 2017 ல் ‘எந்தையும் தாயும்என்ற தலைப்பில் பேச அழைத்தது. மூன்று கேமராக்கள் முன் ஒரு நாற்காலியில் அமர வைத்தார்கள். வரும் 25 நிமிடங்களும் உங்களுடையதுதான், பேசுங்கள் என்றார்கள். அந்த நேரடி ஒளிபரப்பில் அம்மா, அப்பா வாழ்ந்து காட்டிய பண்புகளை மையமிட்டு சில சம்பவங்களை சொன்னேன். அவற்றில் இரண்டு:

அம்மா

ருக்மணி

பெயர் ருக்மணி. திருவனந்தபுரத்திலும் நாகர்கோயிலிலும் வசித்தவர்.  எனவே படித்தது இரு மொழிகளிலும் மும்மூன்று வகுப்பு! வை.மு.கோதைநாயகி போன்ற போன தலைமுறைக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் நூற்றுக்கணக்கான நாவல்களை உரக்கப் படித்து முடித்தார் – எல்லாம் பத்து வயதிற்குள்.  படுத்த படுக்கையாக இருந்த    தன் பாட்டிக்கு அவர் வாசித்துக் காட்ட வேண்டியிருந்தது.  அந்தக் கால வழக்கப்படி  ருக்மணிக்கு 15 வயதில் திருமணம். அதற்கு முன்பே விதவிதமான மனிதர்கள், அவர்களின் நல்லது கெட்டது என்று அவருக்கு அந்த வாசிப்பு கணிசமான உலக ஞானம் அளித்திருந்தது.  அவர் பெற்ற வாழ்க்கைக் கல்வி, புகுந்த வீட்டில்  அவரை மகாராணி போல மரியாதைக்குரியவராக திகழச் செய்தது. அவரின் மூன்று புதல்வர்களில் ஒருவர் ராமகிருஷ்ண மடத்தில் துறவியானார் என்றால், இன்னொரு புதல்வர் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் ஆனார்.  முழுநேரமாக சங்கப் பணி.  குடும்பத்தார் கோபத்தில் சீறினார்கள்.நல்லதுக்குத் தானே, நாட்டுக்காகத் தானே போறாங்க? போற இடத்துல அவங்க காலூன்றி நிற்க நாம சாமிய வேண்டிக்குவோம்’ என்று அந்தத் தாய்  சொன்னாள்.  உலக ஞானமும் நாட்டு நடப்பு பற்றிய விழிப்பும் அவருக்குள் இருந்து அப்படி பேசியிருக்கிறது. ஐ.ஐ.எம் போன்ற பெரிய பெரிய மேலாண் பயிற்சி மையங்களில் சொல்லிக் கொடுக்கிற பார்வை   அவருக்கு சகஜமாக  அமைந்திருந்தது.   சுமார் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட அவரது உறவினர்களின் குடும்பங்களுக்கு அந்த வாழ்க்கைக் கல்வியின் நயத்தை ஒரு  தலைமுறைக் காலம்  பரிமாறினார் அம்மா.  

அப்பா


சங்கரநாராயணன்

பெயர் சங்கரநாராயணன். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக 35 ஆண்டுகள் பணி புரிந்தார். இன்னொரு 35 ஆண்டுகள் ரயில்வே ஓய்வூதியம் பெற்றார். 90 வயது தாண்டிய நிலையில் அவருக்கு ஒரு  செலவும் இல்லை. வங்கியில் சேர்ந்து சேர்ந்து கணிசமான தொகை ஆயிற்று. இதை ஏதாவது நல்ல காரியத்துக்கு பயன்படுத்துங்கள் ன்று புதல்வர்களிடம் சொன்னார். சென்னைவாழ் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக சேவாபாரதி வாயிலாக 25 ஆண்டுகளாக கொடுக்க முடிந்தது. ணிக்காலம் நெடுக  கைசுத்தம் காரணமாக அப்பாவுக்கு நல்ல பெயர். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த நல்ல பெயர் ரயில்வே துறைக்கே கைகொடுத்தது. விஷயம் இதுதான்: ஒரு பசையான ரயில் நிலையத்திற்கு இடமாற்றல் கோரி இரண்டு வெவ்வேறு நிலைய அலுவலர்கள் போட்டியிட்டார்கள். அந்த ரயில் நிலையத்துக்கு ஸ்டேஷன் மாஸ்டராக ங்கரநாராயணன் அனுப்பப்படுவார் என்று அறிவித்து அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வு கண்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்பாவின் வாழ்க்கை சத்தியத்தை மையமிட்டது, அம்மாவின் வாழ்க்கை தர்மத்தை மையமிட்டதுஎன்று பெரியண்ணா (சுவாமி ரகுநாதானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்) ஒரு முறை கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அது எவ்வளவு துல்லியமான வர்னை என்று இப்போது நினைத்துப் பார்க்கும் போது புரிகிறது.

ஸ்வாமி ரகுநாதானந்தர்

பெரியண்ணா

சத்தியத்தையும் தர்மத்தையும் சக்கரங்களாகக் கொண்ட குடும்பத் தேருக்கு அச்சாணியாக இருந்தவர் சின்ன அண்ணா (எஸ்.எஸ். நாராயணன், மத்திய அரசு பொறியாளர்). அப்பா அம்மாவை கடைசி நாள் வரை வைத்துக் காப்பாற்றியே தேய்ந்தவர் அவர்.


எஸ்.எஸ்.  நாராயணன்

சின்ன அண்ணா

பெரிய அக்கா (சீதா ஹரிஹரன்) பாரத விமானப்படை வீரருக்கு வாழ்க்கைப்பட்டாள். இப்போது திருவனந்தபுரத்தில் வசிக்கும் சீதாக்கா ஒரு கொள்ளுப் பாட்டி. சின்ன அக்கா லட்சுமி ஈரோடு வர்த்தக குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள். இரண்டு அக்காள்களின் பிள்ளைகளும் (பாரதத்திலும் வெளிநாடுகளிலும் வசித்தாலும்) தாத்தா பாட்டி (ருக்மணி சங்கரநாராயணன்) வாழ்ந்த விதத்தை கண்டும் கேட்டும் மனதில் பதிய வைத்துக் கொண்டவர்கள். என் பிள்ளைகளும் சின்ன அண்ணா பிள்ளைகளும் கூட அப்படித்தான்.

அது சரி, இங்கே என்னைப் பற்றி எழுத என்ன இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய வாழ்க்கை டைம்லைன் எழுதி எடுத்துக் கொண்டு குதித்தோடிப் போன பேத்தி, பள்ளியிலிருந்து திரும்பி குதித்தோடி வந்தாள். வரும்போதே, தாத்தா!ங்கள் வாழ்க்கை இன்ஸ்பயரிங் லைஃப் என்று என் வகுப்பு ஆசிரியை டைம் லைன் சார்ட்டில் குறிப்பு எழுதியிருக்காங்க” என்று கூச்சலிட்டபடியே வந்தாள். நல்ல தமாஷ் என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் இப்படிப்பட்ட அப்பா அம்மா புண்ணியத்திலும் ஆர்.எஸ்,எஸ் சூழலிலும் நடந்த என் வாழ்க்கை இன்ஸ்பயரிங் என்று சொல்லுகிறாற் போல் தானே இருக்க முடியும் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். ஏதோ தலையில் விழுந்த அட்சதை!

-----------------------------------------

என்னைப் பற்றி

v தியாகபூமி, விவேகானந்த கேந்திர பத்ரிகா, இந்தியா டுடே-தமிழ் ஹிந்துஸ்தான் சமாச்சார், த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், விஜய பாரதம் ஆகிய பன்மொழி ஊடகங்களில் ஆசிரியத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன்.

v ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தந்த ஊக்கத்தினால் பாரத தரிசனம், பஞ்சாமிர்தம்,ழலைக்கு மரபு ஆகிய பண்புப் பதிவு கருத்துப் பகிர்வு முயற்சிகளில் தோள் கொடுக்கிறேன்.

v சில தமிழ்க் கவிதைகள் படைத்திருக்கிறேன்

v தேசிய ஒருமைப்பாடு, ஹிந்து ஒற்றுமை ஆகிய கருத்துக்களிலான கட்டுரைகளை ஹிந்தி, ஆங்கில மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

v உரையாடல் உத்தி வழியே ஹிந்தி மொழி  / தமிழ் மொழி அறிமுக முயற்சி செய்திருக்கிறேன்.

v எப்போதோ ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜய’த்திற்கும் எப்போதாவது அமுதசுரபிக்கும் எழுதியிருக்கிறேன்.

v ற்போது விஜயபாரதம், பாஞ்சஜன்ய, ஆர்கனைசர், விக்ரமா,  விவேக சிஞ்சனா இதழ்களில் எழுதி வருகிறேன்.


எஸ்.எஸ். மகாதேவன்


Comments

Popular posts from this blog

லேக்கனாமிர்தம் இரண்டு

லேக்கனாமிர்தம் 6